என்று தணியும் இந்த எண்ணை தாகம்?

உலகெங்கிலும் பெட்ரோல் விலையைப் பற்றிக் குறை சொல்லாத மனிதர்களே இல்லை. ஸ்திரமில்லாத மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சர்வாதிகார ஷேக்குகளிடம் கையேந்தாத வளர்ந்த/வளரும் நாடுகள் இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம். வளர்ச்சிக்குக் கச்சா எண்ணை அவ்வளவு முக்கியமாகி விட்டது. போக்குவரத்து, தொழில்சாலைகள், மின் உற்பத்தி மற்றும் ப்ளாஸ்டிக் மற்றும் இதர பெட்ரோலியம் சார்ந்த ரசாயனப் பொருள்களுக்கு அவ்வளவு தேவையாகி விட்டது. பல வளர்ந்த நாடுகளில் கட்டிடத் தொழில் மற்றும் வனத்தொழில் (forestry) கூட எண்ணையை நம்பி இருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எண்னை வளமற்ற நாடான இந்தியா, அவசரமாக வளரத் துடிக்கும் நாடு. இன்றைய பொருளாதார சூழலில், வளர்ச்சி என்பது எண்னை பயனளவோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. மேலும், ஏராளமான ஜனத்தொகை உடைய நாடுகள், தங்கள் மக்களின் அன்றாடத் தேவைகளை சமாளிக்கவே கச்சா எண்னையை நம்பியுள்ளன. உதாரணத்திற்கு, மின்சக்தி உற்பத்தியை, கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா சமாளிக்க முடியாமல் திணரும் நாடு. மக்கள், இதைச் சரிகட்ட, டீசலில் இயங்கும் ஜெனரேடர் போன்ற எந்திரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர். சிறு வியாபாரம், வீடுகள், அலுவலகங்கள் யாவும் அரசாங்க மின்சக்தி உற்பத்தி மேல் நம்பிக்கை இழந்து, டீசலில் இயங்கும் ஜெனரேடரை நம்பியுள்ளனர். இதனால். மேலும் வளரும் நாடான இந்தியா, கச்சா எண்னையை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

சில எண்ணை நிறுவனங்கள் அரசாங்கங்களை விடப் பெரியதாகி நுகர்வோரை ஆட்டுவிக்கின்றன. நடுவில் அரசாங்கங்களும் ஒரு புறம் ஆற்றல் சேமிப்பு (energy conservation) என்று அரை மனதோடு சொல்லிக் கொண்டு, மறுபுறம் கிடைக்கும் ஏராளமான வரிப்பணத்தைக் குறியாகக் கொண்டு, அதிகம் எதுவும் செய்வதில்லை. வட அமெரிக்காவில் நாளொன்றுக்கு மூன்று முறையாவது பெட்ரோல் விலை மாற்றப்படுகிறது. இந்த விஷயத்துக்கு மட்டும் வாரக் கடைசி விடுமுறை எதுவும் கிடையாது! 2010 –ல், மெக்ஸிக்கோ வளைகுடாவில் எண்ணைக் கிணறு வெடித்து அமெரிக்காவில் தென்பகுதி கடலோர மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டும், அமெரிக்க அரசால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

1970-களில் கச்சா எண்ணை விலை ஏராளமாக உயர்ந்து, எப்படியாவது இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று பல முயற்சிகளை உலகெங்கும் பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் மேற்கொண்டார்கள். எண்ணை விலை குறைந்தவுடன் இம்முயற்சிகள் கைவிடப்பட்டன. 40 ஆண்டுகளை மனிதகுலம் வீணாக்கி விட்டது என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் நாம் வசதிகளைப் பெருக்கிக்கொண்டு எண்ணைக்கு மேலும் அடிமையாகி விட்டோம்.

2011, 2012ல் மீண்டும் 1970–களின் நிலைமை நம்மை அச்சுறுத்தி வந்தது. அரசியல் பேசிக் கொண்டு, இம்முறையும் சரியான எண்னை மாற்று தீர்வு காணாமல் மீண்டும் வாய்ப்பை வீணாக்கி விட்டோம். இந்த மின்னூல் வெளியாகும் 2015 ஆரம்பத்தில், கச்சா எண்னை விலை ஏராளமாக குறைந்துள்ளது. நம்முடைய முணுமுணுப்பை, துறந்து, மீண்டும் , இம்முறையும் அரபு நாடுகள் மற்றும் எண்ணை நிறுவனங்களின் ஜாலங்களில் சிக்கி விடுவோமா, அல்லது உருப்படியாக ஒரு தொலைநோக்கோடு தீர்வு காண்போமா என்பது மிக முக்கியமான கேள்வி. வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இந்தப் பிரச்சினை இப்பொழுது தலைவிரித்தாடுகிறது. பொதுவாக, மக்களிடம் தீர்வு பற்றி, சற்று அவநம்பிக்கை அதிகமாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதற்காக, விஞ்ஞானிகளின் முயற்சிகளை தள்ளி வைக்கவும் முடியாது.

1970-களில் இது ஒரு அமெரிக்க பிரச்சனையாக மட்டும் இருந்தது. இன்று இது உலகப் பிரச்சனை. ஏனென்றால், 1970 –களில் அமெரிக்க கச்சா எண்னை தேவைகளை விட, 2015 –ல் இந்திய கச்சா எண்னைத் தேவை அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கான தீர்வுகள் சிக்கலானவை. மேலும், ஒரு நாட்டுக்குப் பொருந்தும் தீர்வு, இன்னொரு நாட்டுக்குப் பொருந்துவதில்லை. பெட்ரோல் என்பதைச் சற்றுப் பொதுவாக, ஒரு சக்திப் பிரச்சினையாய் (energy needs) அணுகினால் பல தீர்வுகள் கிடைக்க வழி உண்டு. பெரிய ஆராய்ச்சிகள் செய்ய அமெரிக்காவிடம் இன்று பணம் இல்லை. உலெகெங்கும் பலவித முயற்சிகள் பலவித அணுகுமுறைகளை அந்தந்த நாட்டின் தேவைக்கு ஏற்ப உருவாக்க வழி செய்யலாம். மிக முக்கியமாக, ஒவ்வொரு நாடும் தகுந்த சக்திக் கொள்கை (energy policy) மற்றும் ஒருங்கிணைப்பில் (energy development coordination) ஈடுபடுவது அவசியம்.

மாற்று சக்தி ஐடியாக்களை கடந்த 40 வருடங்களாக நம் சமூகங்கள் ஒரு சந்தேகத்துடனே பார்த்து வருகின்றன. ஏனென்றால், இவை மாணவ தொழில்நுட்ப முயற்சிகள், அல்லது நடைமுறைக்கு வராத செய்திகளாக வலம் வருகின்றன. எப்படியோ அரசாங்கங்கள், எண்ணை நிறுவனங்கள் இம்முயற்சிகளை செயலிழக்கச் செய்துவிடுகின்றன. மேலும், புதிய முயற்சிகள் நான்கு விதமான சவால்களில் அடிபட்டுத் தோற்று விடுகின்றன:

  1. சக்தி அளவு பெட்ரோலைப் போல சக்தியை உற்பத்தி செய்யும் திறன் இல்லையேல், பலவித உபயோகங்களில் குறைதான் மிஞ்சும். உதாரணத்திற்கு, நிஸான் நிறுவனத்தின் Leaf என்ற மின்சாரக் கார், பெட்ரோல் காரைப் போல செயல்பட்டாலும், அதனால் ஒரு மின்னூட்டத்தில் (charge) பயணிக்கக்கூடிய தூரம் ஒரு 100 கி.மீ தான். அதே போல, அமேஸான் நிறுவனம் தன்னுடைய பகிர்வு மையங்களில் (distribution centers) பயன்படுத்தும் மின் ரோபோக்கள், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை, 30 நிமிட மின்னூட்டம் தேவைப்படும் எந்திரங்கள். இந்த வகை பயன்பாட்டிற்கு சரியான எந்திரங்களாக இவை இருந்தாலும், பெட்ரோலில் இயங்கும் எந்திரங்களைப் போல நெடும் நேரம் செயல்படும் திறனற்றவை. அதே போல, பெரிய எடைகளை தூக்க உதவும் எந்திரங்கள் (mechanical lifts), இன்று, பல நிறுவனங்கள், மின் எந்திரங்களாய் மாற்ற முயன்று வருகின்றன. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதற்குத் தேவையான மின்கலன்களின் எடையே, பெரிதாகி விடுகிறது.

  2. பருவங்களில் செயல்திறன் காற்றாற்றல் மற்றும் சூரிய ஒளியாற்றல் கருவிகள், குளிர்காலத்தில் உபயோகத்திற்கு உதவாமல் நம்மைப் பெட்ரோல் பக்கம் திரும்பச் செய்து விடுகின்றன. மேலும், காற்றாற்றல், சில மாதங்கள் மட்டுமே சரிப்பட்டு வருகின்றது. மற்ற மாதங்களில், காற்றுச் சுழலிகள் (wind turbines) காற்று இல்லாமல், இயங்குவதில்லை. வருடம் முழுவதும் இவ்வகை மாற்று சக்தி அமைப்புகளை நம்பியிருக்க முடிவதில்லை.

  3. உலகெங்கும் உபயோகம் காற்றும், சூரிய ஒளியும், அலையும் உலகின் எல்லா பகுதிகளிலும் எப்பொழுதும் சக்தி உற்பத்திக்குத் தயாராகக் கிடைப்பதில்லை. இவை சில பகுதிகளில், சில பருவங்களில் சக்தி உற்பத்திக்கு உதவுகின்றன. ஆனால், பெட்ரோலை கப்பலில் ஏற்றி, வினியோகிப்பதால், அது எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகிக்கும் ஒரு பொருளாகி விட்டது.

  4. விலை பல வித மாற்று சக்தி முயற்சிகள் ஒரு யூனிட்டுக்கு பெட்ரோலை விட உற்பத்தி செய்ய அதிகம் விலையாகிறது. காற்றாற்றல் நிறுவுவதற்கு ஆகும் செலவு அதிகமானது. அரசாங்க உதவி இல்லாமல் காற்றாற்றலை உபயோகித்தல் கடினம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஞ்ஞானிகள் பல முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இக்கட்டுரையில் நாம் அலசும் சில முயற்சிகள் புதன்கிழமைக்குள் சந்தைக்கு வரும் விஷயமல்ல. ஆனால், இம்முயற்சிகளை நாம் ஊக்குவிக்கவில்லையானால், உண்மையிலேயே பனிச்சறுக்குதலுக்கு (skiing) எல்லோரும் துபாய் செல்ல வேண்டியதுதான்!

பல முயற்சிகளின் தோல்விக்கு முக்கியமான காரணம் ஒருங்கிணைப்பின்மை. உதாரணத்திற்கு, சுவீடன் நாட்டில் நடத்தப்படும் ஒரு சூரிய ஒளி ஆராய்ச்சி, குறைந்த செயல்திறனுக்காகக் கைவிடப்படுகிறது (உதாரணம், சூரிய குக்கர்) என்று வைத்துக் கொள்வோம். இந்த முயற்சியை யாரும் ஆந்திராவிலோ, ராஜஸ்தானிலோ, வட ஆப்பிரிக்காவிலோ பரிசோதனை செய்வதில்லை. சுவீடனுக்கு குறைந்த்தாகப் படும் செயல்திறன், ஆந்திராவிலோ, தமிழ்நாட்டிற்கோ போதுமானதாக இருக்கலாமே. அத்துடன், வேறு சக்தி உற்பத்தி வழிகள் இல்லாதவர்களுக்கு ஓரளவிற்கு குறைந்த செயல்திறன் சரியான விலையில் கிடைத்தால் உபயோகப்படும் என்பது என் கருத்து. இன்று, இந்திய கிராமங்களில், மண்பானை தண்ணீரை குளிர்விப்பதைப் போல, மின்சக்தி தேவையற்ற குளிர்சாதனப் பெட்டிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. மேற்குலகில், இம்முறைகளை, ஒரு பொருட்டாகக் கூட நினைக்கமாட்டார்கள். ஆனால், நம் கிராமங்களுக்குத் தேவையான வசதிகளை நாம்தான் உருவாக்க வேண்டும். இந்த குளிர்சாதனப் பெட்டி ஜெர்மனியில் விற்காது.

இரண்டு விஷயங்கள் அனைவருக்கும் சரியாகப் பிடிபட வேண்டும். ஒன்று, இதில் மாய மந்திரம் எதுவுமில்லை. மூலிகை பெட்ரோல் போன்ற மோசடி சமாச்சாரங்களைப் பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. படிப்படியான முன்னேற்றத்தைத் தவிர, வேறு வழியில்லை. (மனித குலம் பல நூற்றாண்டுகளுக்கு வெறும் மரத்தை எரித்து வாழ்ந்து வந்த விஷயத்தை கடந்த நூறாண்டு கால பெட்ரோல் வழக்கம் வெற்றிகரமாக மறக்கச் செய்து விட்டது). இரண்டாவது, எல்லா விஷயங்களிலும் பெட்ரோலியப் பொருள்களை நீக்க முடியாது. எனக்குத் தெரிந்து, விமானப் பயணம் வேறு வழிகளில் முடியுமா என்பது சந்தேகமே. ஆனால். பல சக்தி உற்பத்தி விஷயங்களில் பெட்ரோலியத்திலிருந்து விடுதலை பெற வழிகள் தேடுவதில் மனித குலத்திற்கு நல்லதுதான்.

வளவளவென்று எப்படி நாம் பெட்ரோலுக்கு அடிமையானோம் என்று எழுதுவதை விட, இதோ இந்த விடியோ, 300 ஆண்டுகள் எரிபொருள் வரலாற்றை அழகாக படங்களுடன் ஐந்து நிமிடத்தில் அழகாக சித்தரிக்கிறது:

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cJ-J91SwP8w

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.