8 6. தோற்ற மாற்று சக்தி ஐடியாக்கள்

என்ன இது, விஞ்ஞான கட்டுரையில் தோற்ற ஐடியா பற்றியா எழுதுவது? விஞ்ஞானம் என்றுமே பல தோல்விகளைத் தாண்டிதான் வென்றுள்ளது. சில மேற்கத்திய தோல்வி முயற்சிகளை அலசுவோமே! படித்த யாராவது இதை மாற்றி அமைத்து வெற்றி பெற முயலலாமே!

  • ஹைட்ரஜென் வாயுவினால் இதோ கார் ஓடுகிறது பாருங்கள். எண்ணை நிறுவனங்கள் இதை அழித்து விட்டன”, என்று எனக்குப் பல மின்ன்ஞ்சல்கள் முன்னோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இதை சற்று ஆராய்ந்தால் விஷயம் புரியும். ஹாண்டா நிறுவனத்தின் FCX ஹைட்ரஜென் கார்களை அழகாக வலம் வருவதாக செய்தி. ஏன், இந்த வகை கார்கள் சந்தைக்கே வருவதில்லை? காரணம் ஹைட்ரஜென்! ஒரு 13 டன் லாரியில் ஹைட்ரஜென் நிரப்பி ஒரு பம்பிற்கு அனுப்பினால், அது பத்து கார்களுக்குரிய ஹைட்ரஜெனைத்தான் பூர்த்தி செய்ய முடியும். அதே 13 டன் லாரியில் பெட்ரோல், ஒரு 300 கார்களுக்கு எரிபொருள் நிரப்ப இயலும். ஏன் இப்படி? ஹைட்ரஜென் நிரப்பிய உயர் அழுத்த கலன்கள் ஏராளமான எடை கொண்டவை. இப்படிப்பட்ட ஹைட்ரஜென் பம்புகளை பாதுகாப்பாக நிறுவுவது மிகப் பெரிய சவால். இதனாலேயே இவ்வகை ஐடியாக்கள் அப்படியே உபயோகம் இல்லாமல் தூங்குகின்றன.

  • பூகோளவெப்ப (Enhanced Geothermal) சக்தி உற்பத்தி. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், கரியிலிருந்து உருவாகும் சக்திக்கு நிகரானது என்று பல ஆய்வுகள் சொல்லியுள்ளன. எப்படி வேலை செய்கிறது இவ்வகை பூகோளவெப்ப சக்தி உற்பத்தி? பூமியின் பல மைகள் கீழே பாறைகளுக்கு அடியில் உள்ள வெப்பத்தை நீராவியாக மாற்றி டர்பைன்களை சுழற்றி மின்சாரம் உற்பத்தி செய்வது. இதற்கு இரு துவாரங்கள் தேவை. ஒன்று, நீரை பாய்ச்சுவதற்கு, மற்றொன்று, நீராவியை வெளியே கோண்டு வருவதற்கு. அட, ஏன் இந்த ஐடியாவை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை? இதற்கு, ஆழமான துவாரங்கள் டிரில் செய்வதற்கு ஏராளமான பொருட் செலவாகும். மேலும், இத்துறைக்கு அதிக முதலீடு இல்லை என்பதும் ஒரு குறை. மேலும் துவார டிரில் தொழில்நுட்ப முன்னேற்றம் இந்த வழியை பல உலகப் பகுதிகளில் பரவ உதவலாம். இப்போதைக்கு, அதிக ஆழமாக தோண்டத் தேவையில்லாத இடங்களிலே உபயோகத்தில் உள்ளது.

  • இந்தியாவுக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை. வட அமெரிக்காவில், வீடு கட்டும் தொழில் மற்றும் தொழிற்சாலைகள் நிறைய மரத்தை உபயோகிக்கின்றன. மரத்தை அறுக்கும் போது மரத்தூள் ஏராளமாக வீணாக்கப்படுகிறது. மரத்தூளைக் கொண்டு மீண்டும் particle boards என்ற செயற்கை மரப் பலகைகளை உருவாக்குகிறார்கள். எனினும், நிறைய வீணாக்கப்படுகிறது. மரத்தூள் நல்ல எரிபொருள். மரத்தூளை எரித்து, அதில் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதனால், சமூக, விலைவாசி விளைவுகள் உண்டாவதென்னவோ உண்மை. அத்துடன் இது உலகளாவிய ஐடியா என்று சொல்ல முடியாது. சில பகுதிகளில் இதற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

இதைப் போன்று பல ஐடியாக்கள் தேடினால் நிறைய கிடைக்கும். அதுவும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் சக்தி துறை மானியத்தில் கைவிடப்பட்ட முயற்சிகள் ஏராளம்.

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.