12 4. பச்சையா சிகப்பா?

அடுத்த முறை உங்கள் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் (accounting/finance department) உங்களது நிறுவனம் எத்தனை மின்சாரம் உபயோகிக்கிறது என்று விசாரித்துப் பாருங்கள்.

போன மாசம் 5 லட்ச ரூபாய் கட்டினோம், அதற்கு முந்தைய மாதம் 4.8 லட்சம். எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேட்டு மாசக் கடைசியில் குளறறீங்க. லாப நஷ்ட கணக்கு பாக்கவே சரியாக நேரமில்லை!” என்று அலுத்துக் கொள்வார்கள்.

உங்களது கேள்விக்கான பதில் அதுவல்ல. பதில், எத்தனை கட்டணம் கட்டினோம் என்பது. கேள்வி, எத்தனை உபயோகித்தோம் என்பது. சக்தி பேணுதல் விஷயத்தில் அடிப்படைப் பிரச்சனை இதுதான். எத்தனை உபயோகிக்கிறோம் என்று தெரியாத வரை, அதை குறைக்க வழி தேடுவது அபத்தம்.

உங்களது நிறுவனத் தலைவர், “எங்கள் குறிக்கோள் நிறுவன, மனித மற்றும் பூமியின் லாபத்திற்காக மூச்சு விடாமல் உழைப்பது 14(profits, people, planet)” என்று சிரித்துக் கொண்டே அறிக்கை விட்டிருப்பார்! அதை எப்படி சாதிப்பது என்று அவருக்கும் தெரியாது; அவர் கீழ் வேலை செய்யும், யாருக்கும் தெரியாது!

நிறுவனங்களுக்குச் சக்தி பேணுதல் விஷயத்தில் ஏதாவது தாங்கள் செய்து கொண்டிருப்பதாக அறிவித்தல் அவசியம். முதலீட்டாளர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள். வருடாந்திர பட்டியலில் (annual reports) இதைப் பற்றிப், பட்டும் படாததுமாய் ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டியுள்ளது! இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சொன்னாலும் குற்றம், சொல்லாவிட்டாலும் குற்றம். பெரிதாக ஏதாவது செய்யப் போனால், வியாபார லாபம் பாதிக்கப் படும். முதலீட்டாளர்கள் (investors) டின் கட்டி விடுவார்கள். செய்யவில்லையானால், ‘உங்களது போட்டி கம்பெனி என்னவெல்லாமோ (?!) செய்கிறதே. நீங்கள் எதுவும் செய்ய உத்தேசமில்லையா?” என்று கேள்வி கணைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

முதலீட்டாளர்கள் ஒரு புறம். வாடிக்கையாளர்கள் மறு புறம். சில வாடிக்கையாளர்கள் பச்சை’ கம்பெனிகளை ஆதரிக்கிறார்கள். பச்சைக் நிறுவனங்கள் (Green organizations) சக்தி பேணுதல் விஷயத்தில் கருத்தாக இருப்பவை. இவ்வகை நிறுவனங்கள், சக்தியை விரயமாக்காமல் இருப்பது, பொருட்களை மறு உபயோகம் செய்வது, அதிக சக்தி, நீர் விரயமாகாமல் உள்ளூர் பொருட்களை விற்பது, ரசாயனம் கலக்காத விவசாயத்தை ஊக்குவிப்பது, போன்ற பல முயற்சிகளில் ஈடுபடுகின்றன.

பல பெரிய அங்காடிகள் இன்று ப்ளாஸ்டிக் பைகளைத் துறந்து, துணிப் பைகள் உபயோகிக்க, சின்ன சலுகைகள் தருகின்றன. 15பல வங்கிகள், செல்போன் நிறுவனங்கள், ஏன் அரசாங்கங்கள் கூட, காகித பட்டியல், மற்றும் பில்களைத் தவிர்த்து, மின்னணு வடிவத்திற்குத் தாவி, காகித விரயத்தைக் குறைக்க முயன்று வருகின்றன. இந்தியாவில் அழைப்பு டாக்ஸிகள் எஸ்.எம்.எஸ் (SMS) மூலம், காகிதத்தை முழுவதும் தவிர்க்கின்றன. இப்படியொரு புறமிருக்க, நிறுவனங்கள் ஏன் முழு மனதோடு இப்படிப்பட்ட செயல்களில் தீவிரம் காட்டுவதில்லை? காரணம், இம்முயற்சிகளுக்கான செலவும், அதற்காக எந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதும்தான். உதாரணத்திற்கு, ரசாயன உரமற்ற உள்ளூர் தக்காளி மற்ற தக்காளியை விட 4 மடங்கு விலையானால், எத்தனை வாடிக்கையாளர்கள் அதை வாங்குவார்கள்? வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, ரசாயன உரமுடைய தக்காளியும், ரசாயனமற்ற தக்காளியும் அதே விலைக்கு விற்க வேண்டும், மிஞ்சிப் போனால், ஒரு 10% அதிகமாக விலை தரத் தயார். அவ்வளவே. ஒரு உற்பத்தியாளர் அலுத்துக் கொண்டார், “எங்களது தயாரிப்புகள் 80% மறுபயன்பாட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று அறிவித்தால், மற்ற 20% சதவீதத்தில் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்கிறீர்கள் என்று வாடிக்கையாளர்கள் துருவுகிறார்களாம்! உற்பத்தியாளர்கள் இதனால், கையை பிசைந்து கொண்டு, வெறும், வருடாந்திரப் பட்டியலில் தம்பட்டம் அடிக்க மட்டும் ஏதாவது செய்து வருகிறார்கள். அதாவது, சக்தி பேணுதலா (பச்சை) அல்லது நஷ்டமா (சிகப்பு) என்ற கருத்து உற்பத்தியாளர்கள் மத்தியில் உருவாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மேற்குலகில், வாங்குபயன்எறி (buy, use, dispose) என்பது கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரிய சாபக் கேடாகி விட்டது. வாரந்தோறும் வீட்டு வாசல்களில், பழைய டிவி, அடுப்பு, துணி துவைக்கும் எந்திரம் மற்றும் நாற்காலிகள், சோபா என்று பலவற்றையும் குப்பையாக வைப்பதைக் காணலாம். இவற்றில் பல பொருட்கள் நன்றாக வேலை செய்யும் பொருட்கள். புதிய மாடல் வேண்டுமென வீசி எறியப்பட்டவை. நுகர்வோர் இந்த மனப்பான்மையை மேற்குலகில் என்று துறப்பார்கள் என்று தெரியவில்லை. இப்பொருட்கள் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு சுற்றுப்புற சூழலுக்குத் தீங்கு விளைவிப்பது மறுக்க முடியாத உண்மை. வட அமெரிக்காவைப் பற்றிய ஒரு ஜோக்: இங்கு விலை உயர்ந்த கார்கள் தெருவில் நிறுத்தப்படும்; குப்பைகளை பத்திரமாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்படும்!

சமீப காலமாக, புதுப்பித்த தயாரிப்புகள் (refurbished products) மெதுவாக மேற்குலகில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. ஒவ்வொரு பெரிய மின்னணு தயாரிப்பாளரும் புதுப்பித்த தயாரிப்புகளை சற்று குறைந்த விலையில் விற்கத் தொடங்கியுள்ளார்கள். டிவி, மடிக்கணிணி, செல்பேசி போன்ற பொருட்களை, சில நுகர்வோர் புதுப்பித்த தயாரிப்புகள் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். புதுப்பித்த தயாரிப்புகளை விற்கவே சில கடைகளும் உள்ளன.

மேற்குலகில் சில பேணுதல் தீவிரவாதிகளுக்காக பெரிய கடைகளும் உண்டு. சாதாரண சில்லரை வியாபாரங்களை விட பன்மடங்கு அதிகமாக விலையில் பொருட்களை விற்கிறார்கள். இந்த கடைகள் ஓரளவிற்கு நகைச்சுவையாகவும் இருக்கும். ப்ளாஸ்டிக்கை தவிர்ப்பதாக (ப்ளாஸ்டிக் மண்ணோடு கலக்க பல நூறு ஆண்டுகள் ஆகலாம்) சொல்லிக் கொள்ளும் இவர்கள், புல் மட்டுமே உணவாய் கொண்ட மாட்டின் பாலை ப்ளாஸ்டிக் குவளைகளில் விற்பது வேடிக்கை! மேலும், முழு சைவ கோழி மற்றும் இறைச்சி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்தக் கடைகளில் உண்டு, விற்கப்படும் கோழி, வாழ்ந்த காலத்தில் சைவமாம்! நகைச்சுவையை தவிர்த்துப் பார்த்தால், இந்த மாதிரி கடைகளில் உள்ளூர் பொருட்களை விற்கிறார்கள். ரசாயன உரமற்ற காய்கறிகளை விற்கிறார்கள். இப்படிப்பட்ட கடைகளில் பொருட்களின் அட்டைகளை படித்தல் ஒரு சுவாரஸியமான அனுபவம். சாக்லேட் வாங்கி அட்டையைப் படித்தால், எப்படி பால் மற்றும் இயற்கையாக வளர்ந்த கொட்டைகளை பயன் படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்பொழுதுதான், மற்ற பல மலிவு சாக்லேட்கள் பாலையே உபயோகிப்பதில்லை என்று நமக்குத் தெரிய வருகிறது!

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.