11 3. சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே

மாற்று சக்தி பற்றிய புதிய ஐடியாக்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களை ‘என்று தணியும் இந்த எண்ணை தாகம்’ என்ற தலைப்பில் பார்த்தோம். அதில், முக்கியமாக, ஆற்றல் சேமிப்பு (conservation) பற்றி மேல்வாரியாக விவாதித்தோம். ஆற்றல் சேமிப்பில் உள்ள சிக்கல்களை பற்றிய கட்டுரை இது. முன் சொன்ன கட்டுரையை படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படித்தால், இப்பிரச்சனையின் முழு பரிமாணமும் புரிந்து கொள்ள உதவும். . வைரமுத்துவின் பாடலை சற்று மாற்றியமைத்து,
பச்சை நிறமே, பச்சை நிறமே,
சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே
என்று தலைப்பு வைக்க ஆசைதான்; பத்திரிகை ஆசிரியர் கட்டுரையா தலைப்பா என்று உதைக்க வந்து விடுவார்!

சரி, விஷயத்துக்கு வருவோம். முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி, அல் கோர், (Al Gore) புவி சூடேற்றம் (global 13warming) மற்றும் அதனால் உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி எல்லோருக்கும் புரியும்படி பவர்பாயிண்ட் காட்சியளிப்பு (Powerpoint presentation) செய்து நோபல் பரிசையும் தட்டிச் சென்று விட்டார். அவர் தலைவலியைப் பற்றிச் சொல்லப் போய், உலகிற்கு திருகு வலி வந்த கதைதான் போங்கள்! ஒரு புறம் தீய விளைவுகளை விஞ்ஞானிகள் விளக்கோ விளக்கென்று விளக்குகிறார்கள். யாராவது, ஏதாவது, செய்வார்கள் என்று யாரும், எதையும், செய்யாமல் ஒரு 6 வருடம் போயே போய்விட்டது! அட, பிரச்சனையை அழகாக சாட்சியங்களுடன் சொன்ன விஞ்ஞானிகள் ஏன் அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை? அப்படியே அவர்கள் சொன்னாலும் ஏன் யாரும் அதைப் பின்பற்றுவதில்லை? இப்படிப்பட்ட கேள்விகள் நம் மனதில் தோன்றுவது இயற்கைதான். அதிகம் ஒன்றும் மாறாததற்கு பல காரணங்கள் உண்டு. ஒரு புறம் இது புலிக்கு (கொஞ்சம் பழமொழியை ப்ரமோட் செய்துதான் பார்ப்போமே) மணி கட்டும் சமாச்சாரம். அதைவிட முக்கியமாக, எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பது என்று யாருக்கும் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை.
இதனால்தான், பருவநிலை மாற்றக் கருத்தரங்குகள் (climate change conferences) எந்த முடிவும் எடுக்காமல் குழப்பி, ஒரு அரசியல் சாக்கடையாக ஆகிவிட்டது. பல அரசியல்வாதிகள், இந்தப் பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மேலும் குழப்புகிறார்கள். இந்த விஷயத்தில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் கருத்தரங்குகள், பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட வெளியீட்டை அச்சடித்து, மேலும் புவி சூடேற்றத்திற்கு வழி வகுக்கிறார்கள். கனடா போன்ற நாடுகள் முதலில், ‘கிழித்து விடுவேன் 2020 க்குள்’ என்று ஒரு கருத்தரங்கில் அறிவித்து விட்டு, அடுத்த கருத்தரங்கில், மற்ற நாடுகள் செய்தால் நாங்களும் செய்ய முயற்சிப்போம் என்று ஜகா வாங்குவது மேலும் குழப்பமளிக்கிறது. பல அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் சக்தி பேணுதல் (energy sustainability) பற்றி மேலும் குழப்பி வருகின்றன.
வழக்கம் போல், புவி சூடேற்ற அரசியலைத் தவிர்ப்போம்.
1. இந்த குழப்ப நிலைக்கு என்ன காரணம்?
2. இதற்கு எப்படிப்பட்ட தீர்வுகள் தேவை என்று யாருக்காவது பிடிபட்டுள்ளதா?
3. எங்கே தொடங்கியுள்ளார்கள்?
4. இன்னும் எத்தனை நாளாகும்?
5. வளரும் நாடுகளுக்கு இதனால் என்ன பாதிப்பு?
6. அரசாங்கங்கள் என்னதான் செய்கின்றன?
இது போன்ற விஷயங்களை விவரிக்கவே இக்கட்டுரை. அதற்கு முன்பு, இந்த பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் உதவலாம்.
உதாரணத்திற்கு, ஒரு விஞ்ஞான குழு, இந்தியாவில் சைவ உணவு உண்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கான, அசைக்க முடியாத புள்ளி விவரங்களையும் முன் வைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எப்படி அதிக இந்தியர்களை சைவ உணவு உண்ண வைப்பது? முதல் பிரச்னை, அசைவ உணவு உண்பவர்கள் சைவ உணவையும் உண்கிறார்கள். பல கோடி குடும்பங்களை, எப்படி அணுகி, இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது? உடனே காய்கறி ஜோக் ஸ்பெஷல் என்ற இலவச இணைப்பு கொடுத்து கேலிக்கூத்தாக்குவது மிகவும் சுலபம். ஆனால், இப்பிரச்னையை சரிவரத் தீர்க்க, குடும்பங்கள் ஒவ்வொன்றும் எத்தனை காய்கறிகளை உபயோகிக்கின்றன என்ற அளவிடல் முயற்சி (per average family consumption) முதல் கட்டமாகும். அந்த அளவிடல் படி, அடுத்த கட்டத்தை அடைய என்ன திட்டங்கள் வகுத்தால் சாத்தியமாகும் என்று தெளிவாக அறிவிக்க வேண்டும். திட்டப்படி நடக்கின்றதா, வேறு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அடுத்தபடி செயல்பட வேண்டிய பெரிய பிரச்னை இது.

ஆனால், அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு, என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருப்பது இயற்கை. இதற்கு நடுவில், அரசியல் கட்சி ஒன்று, ”2015 க்குள் தமிழ்நாட்டில் காய்கறி உபயோகம் 30% உயர எங்களிடம் திட்டம் உள்ளது” ”’”, என்று குழப்பினால், எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட, சக்தி பேணுதல் முயற்சிகள் இவ்வாறே நடந்து வருகின்றன. ஆனால், குழப்பமான 6 வருடங்களுக்குப் பின், சற்று தெளிவு தோன்றுவது போல சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்குவதும் இக்கட்டுரையின் இன்னொரு நோக்கம். ஆரம்ப கால முயற்சிகளுக்கே உரிய கோளாறுகள் இவற்றுக்கும் இருப்பது உண்மை. ஆனால், இப்படி முயற்சி எடுக்கவில்லை என்றால், பிரச்சனைக்கு முடிவு காண வேறு வழியில்லை. அல் கோர் சொல்வது போல, நாம் மண்ணோடு மண்ணாகுவோம் என்று கூட நிச்சயமாக சொல்ல முடியாது; பனியோடு உறைந்து போகவும் வாய்ப்புண்டு!

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.