10 2. சக்தி முயற்சிகளின் யதார்த்தங்கள்

சக்திக்காக பல அரசாங்கங்கள் உலகெங்கும் போர்கள் தொடங்கி இந்த பிரச்சனையை சிக்கல் வாய்ந்த உலக அரசியல் பிரச்சனையாக்கி விட்டன. இக்கட்டுரையில் சக்தி பாதுகாப்பு அரசியல் (energy security geopolitics) பற்றி எதுவும் விவாதிக்கப் போவதில்லை.
வளரும் ஒவ்வொரு நாட்டிற்கும், வளர்ச்சிக்காக ஏராளமான சக்தி தேவைப்படுகிறது. இன்று அது பெருமளவும் தொல்லுயிர் எச்ச எரிபொருள்களுக்கான (fossil fuels) தேவையாக மாறிவிட்டது. இதை எப்படியோ ஒரு Hydrocarbon பொருளாதாரமாக ஒவ்வொரு நாடும் மாற்றத் துடிப்பது துரதிஷ்டம்.
உதாரணத்திற்கு, உலகின் முதல் சக்தி நெருக்கடி 1974/1975 வருடங்களில், இந்தியாவின் ஜனத்தொகை இன்றைய ஜனத்தொகையை விட பாதிதான். பம்பாய் அரபுக்கடல் எண்ணைக் கிணற்றைத் தவிர புதிதாக எந்த எண்ணை சப்ளையும் இந்தியாவிற்கு இல்லை. ஆனால், இன்றோ இரட்டிப்பாகி விட்ட மக்கட்தொகைக்கு சக்தி வழங்கும் கட்டாயம், நமக்கு ஏற்பட்டுள்ளது மறுக்கமுடியாத உண்மை. அத்துடன், 1970 -களில், ஒரு ரேடியோ தான் நம்முடைய மின்னணு சாதனம். இன்று, அது டிவி -கள், டிவிடி கருவிகள், செல்பேசி என்று ஏராளமாக வளர்ந்து விட்டது. 1970 -களில் இருந்த ஊர்திகள் இன்றைய ஊர்திகளின் கால் பங்கு கூட இருக்காது. 1970 -களில் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே கணினிகள் இருந்தன. இவற்றை இங்கு குறிப்பிடக் காராணம், நம்முடைய சக்தி தேவை பல மடங்கு ஆகி விட்டது. இயற்கை நமக்கு எண்ணைய் என்ற உருவத்தில் உதவவில்லை. வேறு முறைகளைத் தேடுவது நமக்கு அவசியமாகி விட்டது. வேறு வழியில்லை. முன்னே சொன்னது போல, இந்தப் பிரச்சினையை மேற்கத்திய நாடுகள், நமக்காகத் தீர்த்து வைக்கும் என்று நம்புவது முட்டாள்தனம். இதில், அவர்களைவிட நமக்குப் பாதிப்பு அதிகம்.
நம்முடைய பல சக்தித் தேவைகளையும் (போக்குவரத்து, ரசாயனம், மின்சாரம்) பெட்ரோலியப் பொருட்கள் பூர்த்தி செய்துள்ளன. இன்று தொல்லுயிர் எச்ச எரிபொருள் வளம் உலகெங்கும் குறைந்த வண்ணம் உள்ளது. பெட்ரோலைப் போல இன்னொரு மாற்றுப் பொருள் திடீரென்று நமக்குக் கிடைக்கும் என்னும் எண்ணத்தை முதலில் நாம் துறக்க வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களின் சில உபயோகங்களை, சில பொருட்கள் (ஒரே பொருளல்ல) நமக்கு ஓரளவிற்கு தரலாம். இது ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி சவால். கிடைக்கும் மாற்று அமைப்பின் இயக்கத் திறமையை ஆராய்ச்சியால் மேம்படுத்துவது ஒன்றுதான் வழி. இந்த மாற்று முறைகள் நாட்டிற்கு நாடு மாறுபடும்.
உதாரணத்திற்கு, இந்தியா போன்ற நாடுகளில் LPG -க்கு அரசாங்கம் தரும் மானியத்தை வைத்து, பல டாக்ஸிகள் மற்றும் சிறிய 12கார்கள் சமையல் வாயு கலன்களை உபயோகிக்கிறார்கள். ஸ்வீடன் போன்ற நாடுகளில், இயற்கை வாயுவை உபயோகித்து (NGV – Natural Gas Vehicle) பல பொது போக்குவரத்து ஊர்த்திகள் இயங்குகின்றன. ஸ்வீடன் கணக்குப்படி, இயற்கை வாயு, பெட்ரோலைவிட 70% முதல் 80% வரை செலவாகிறதாம். வட அமெரிக்காவில் பம்புகளில் வாங்கும் பெட்ரோலில், எதனால் (Ethanol) கலக்கிறார்கள். இது ஓரளவிற்கே (<10%). வட அமெரிக்காவில், அதிகம் சோளம் உற்பத்தியாவதால், சோளத்திலிருந்து எடுக்கப்பட்ட எதனாலைக் கலக்கிறார்கள். பிரேஸிலில் ஒரு படி மேலே சென்று, அவர்களது கார்களில், கரும்பிலிருந்து உருவாக்கிய மெதனாலைக் கொண்டு கார்களை செலுத்துகிறார்கள். பிரேஸிலில் உள்ள புதிய கார்கள் பெட்ரோல் மற்றும் மெதனாலில் செயல்பட்டால்தான் விற்க முடியும். இதை Flex Fuel cars என்கிறார்கள். இஸ்ரயேல் ஒரு படி மேலே சென்று, மின்சார கார்களுக்கு மின்கலன் மாற்று அமைப்பு ஸ்தலங்களை உருவாக்கியுள்ளது. Better Place என்ற நிறுவனத்தின் விடியோ இங்கே…

இஸ்ரயேலின் இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று தெரியவில்லை. Better Place கலிஃபோர்னியாவிலும், கனடாவிலும், வெற்றி பெற்றால், இவ்வகை மின்கலன் மாற்று ஸ்தலங்களை உருவாக்குவதாகச் சில வருடங்கள் முன்பு சொல்லி வந்தார்கள்.
மின்சாரச் சேமிப்புத் தொழில்நுட்பம் (battery technology) பல சவால்களை கடக்க வேண்டும். இப்படிப்பட்ட மின்கலன் மாற்று இடங்கள் பெரிய நகரங்களுக்குள் மின்சார கார்கள் பரவலாக ஓரளவு உதவும். நகரை விட்டுப் பல்லாயிரம் மைல்கள் பயணிக்க வேண்டிய பெரிய நாடுகளில் இவற்றின் பங்கு முன்னேற மின்கலன் தொழில்நுட்பம் நிறைய முன்னேற வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நாடும் தனக்கு உதவும் முறைகளை கையாண்டு சமாளித்து வருகிறார்கள்.
2010 –ல் பில் கேட்ஸ் TED என்ற அமைப்பில் புதிய சக்தி முயற்சிகள் பற்றி ஒரு அருமையான உரையாற்றினார். அதில், அவர் சொன்ன ஒரு உண்மை மிகவும் முக்கியமான ஒன்று. இன்று நம்மிடம் உள்ள எல்லா வகை மின்கலன்களையும் (காரில் உள்ளவை, செல்பேசியில் உள்ளவை, யு.பி.எஸ். –ல் உள்ளது என்று பல வகைகள்) உலகின் எல்லா பயன்களுக்கும் உபயோகித்தால், அது உலகை ஒரு 10 நிமிடமே செயல்படுத்தும்! மின்கலன்கள் எவ்வளவு முன்னேற வேண்டியுள்ளது என்று இதைவிட சிறப்பாக விளக்க முடியாது! மேலும் கேட்ஸ், பல புதிய முயற்சிகளில் முதலீடுகள் செய்துள்ளார். குறிப்பாக, அணுசக்தியில் புதிய அணுகுமுறைகளை அவர் அழகாக விளக்குகிறார். இயற்கையை அரவணைத்து புதிய சக்தி முயற்சிகளை அணுக வேண்டிய கட்டாயத்தை மிக அழகாக இங்கு விளக்குகிறார்…
http://www.ted.com/talks/view/lang/en//id/767
இன்னொரு முக்கியமான விஷயம். எதிர்காலத்தில் பெட்ரோலுக்கு ஒரு மாய மாற்றுப் பொருளை மனித குலம் கண்டு பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். படிப்படியாக உழைத்து, ஆராய்ந்து முன்னேற்றிய பல தொழில்நுட்பங்கள் உபயோகம் இல்லாமல் போய்விடக்கூடும் அல்லவா? அப்படி நேர்ந்தால், ஏராளமான முதலீடுகள் வீணாகுமே! இதைப் பற்றிக் கவலைப்பட்டால், மனித குலம் அடுத்தபடி முன்னேற முடியாது. ஒரு 50 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள்வரை நாம் சும்மா காத்திருக்க முடியாது.
அரசியலைத் தாண்டி என்ன செய்தால் நன்றாக இருக்கும்?
1. சக்தி ஆராய்ச்சி ஒருங்கிணைப்பிற்காக ஒவ்வொரு நாடும் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் வேலை, தன்னுடைய நாட்டிற்குள் நடக்கும் ஆராய்ச்சிகளைக் கண்காணிப்பது. மேலும், பல நாடுகளுடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பு. தாங்கள் கைவிட்ட முயற்சிகள் மற்றும் வெற்றிகளை உலகிற்கு பறை சாற்ற வேண்டும். கைவிட்ட முயற்சிகளைப் பற்றித் தம்பட்டம் அடிப்பது என்பது பலருக்கும் சரியான ஒன்றாகப் படாது. இது ஒரு அணுகுமுறை மாற்றம். தோல்வி என்பது, சக்தி முயற்சிகளில், பல காரணங்களால் வருவது. உலகின் வேறு பகுதியில், வேறு அணுகுமுறையில் தோல்வியே வெற்றியாக மாற வழியுண்டு என்பது என் கருத்து.
2. உலகின் சக்தி சார்ந்த முயற்சிகளின் தகவல்தளம் (energy initiative database) மிக அவசியம்
3. சக்தி ஆராய்ச்சியில் அறிவுக் காப்பீடு (Patent) போன்ற சமாச்சாரங்கள் குழப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
4. தனி மனித சக்தி முயற்சிகளுக்கு அரசாங்கங்கள் முட்டுக்கட்டையாக இருக்க்க் கூடாது. மின்சாரத்தால் தனக்கு வரும் வருமானம் அடிபடுகிறது என்று தனிக் குடிமகனின் முயற்சிகளுக்குத் தடை விதிக்கக் கூடாது
5. மாற்று சக்தி முயற்சிகளுக்கு (ஒவ்வொடு நாட்டின் தட்பவெட்ப நிலையைப் பொருத்தது) வரிச் சலுகைகள் அளிக்கப் பட வேண்டும்
6. பலகலைக்கழக மற்றும் அரசாங்க/தனியார் பரிசோதனை முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்
7. நிலையான சக்தி முயற்சி (stationary energy initiatives) மற்றும் நகரும் சக்தி முயற்சி (mobile energy initiatives) இரண்டிற்கும், தனித் தனி அணுகுமுறை/கொள்கை இரண்டும் வேண்டும். உதாரணத்திற்கு, காற்று சக்தி அணுகுமுறை, ஒரு காருக்குத் தேவையான சக்தி அணுகுமுறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. நிலையான சக்தி முயற்சிகளில் எடை ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், நகரும் சக்தி முயற்கிகளில் எடை ஒரு பெரிய விஷயம். ஒரு காரில், 2 டன் எடையுள்ள மின்கலத்தைப் பொருத்த முடியாது.
8. பயனுக்கேற்ப, சக்தி அளவுகளை ஒவ்வொரு நாடும் சரியாக வெளியிட வேண்டும். அதற்கேற்ப சக்தி முயற்சிகளை வகைப்படுத்தி ஊக்குவிக்கவும் வேண்டும். இது ஒரு நாட்டின் சக்திக் கொள்கைக்குள் அடங்கினாலும், நாட்டின் பகுதிக்கேற்ப மாறுபட்ட அணுகுமுறை வேண்டும். உதாரணத்திற்கு, கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறிய கடைகளுக்கு மின் தேவைகள் குறைவு. அத்துடன் கடைகள் இரவு பத்து மணிக்கு மேல் திறந்திருக்காது. சூரிய ஒளியில் மின்னூட்டம் பெற்று நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் ஒளி (2 முதல் 5 விளக்குகள்வரை இன்றைய LED விளக்குகள் குறைந்த மின்சாரத்தில் முன்பைவிட அதிக வெளிச்சம் கொடுக்கின்றன) கொடுத்தால் போதுமானது. ஆனால், நகர்புற தேவைகளுக்கு (அதிக நேர விளக்குகள்) அதுவே ஒத்து வராது.

முடிவுரை

சக்தி முயற்சிகள் என்பது மிகவும் விரிவான ஒரு துறை. ஒரு கட்டுரையில், எல்லாவற்றையும் எழுதுவது என்பது இயலாதது. ஆல்கே (algae) கரியமில கட்டுப்பாட்டைப் பற்றி ஏன் எழுதவில்லை, பூமிக்குள் கார்பனை செலுத்தும் நுணுக்கங்களைப் (carbon sequestration) பற்றி ஏன் எழுதவில்லை என்று சிலர் குறைப்படலாம். பலவித புதிய முயற்சிகளைப் பற்றி எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால், முக்கியமான விஷயம், பல ஆண்டுகள், பல வழிகளில், முயன்றால்தான் இப்பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியும். அதுவரை, சக்தி சேமிப்பு என்பது ஒன்றுதான் நம் கையில்.

License

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.